ராஜஸ்தானில் காங்கிரசின் படுதோல்வி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Amethi:
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரசால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் காங்கிரஸ் மண்ணை கவ்வியுள்ளதால் அங்குள்ள மாநில அமைச்சர்கள், அரசுக்கு எதிரான மன நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஒரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முனைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு 121 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜக கூட்டணிக்கு 76 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
தற்போது பாஜக பெற்றிருக்கும் வாக்கு சதவீதத்தை சட்டமன்ற தொகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில் 185 தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காங்கிரசின் முக்கிய தலைவராக இருக்கும் சச்சின் பைலட்டின் சொந்த தொகுதியான சவாய் மதோபூரில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார். இது ஆளும் காங்கிரசுக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் 4 மாதங்களுக்குள்ளாகவே ஏற்பட்டு விட்டதென்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில அமைச்சர்கள் உதய்லால் அஞ்சனா, ரமேஷ் மீனா ஆகியோர் தேர்தல் தோல்வியை காங்கிரஸ் ஆய்வு செய்து, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உண்டான வழியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.