ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையே இந்த தேர்தலில் நேரடி போட்டி காணப்படுகிறது.
New Delhi: டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் முன்னிலை நிலவரங்கள் தெரிந்து விடும்.
டெல்லியில் ஆம் ஆத்மி – பாஜக இடையே கடும் போட்டி காணப்படுவதால் இந்த தேர்தலில் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பாஜக 55 இடங்கள் வரைக்கும் கைப்பற்றும் என்று அக்கட்சியின் டெல்லி மாநில தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். மக்களின் ஆதரவு யாருக்கு என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
டெல்லியில் சட்டமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரையில் நீடித்தது. 24 மணி நேரத்தை கடந்த பின்னர் தேர்தல் ஆணையம் சுமார் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தது. இங்கு 1.47 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் 62.59-ஆக அமைந்துள்ளது.
கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. தேர்தலுக்காக மொத்தம் 2,700 மையங்கள் மற்றும் 13 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வாக்கு எண்ணிக்கைக்காக 21 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, ஆம் ஆத்மி மீண்டும் டெல்லியில் ஆட்சியமைக்கும் என தெரிகிறது. பாஜகவுக்கு 2-வது இடம் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
இதனை மறுத்துள்ள டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, 48 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று விடும், அதன்பின்னர் தங்களது தோல்விக்காக எதிர்க்கட்சிகள் வாக்கு எந்திரத்தை விமர்சிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
NDTV English channel, NDTV Khabar டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை NDTV ஆங்கில செய்தி தொலைக்காட்சி, NDTV இந்தி செய்தி தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக பார்க்கலாம்.
டெல்லியில் கடந்த 1998 முதல் 2013 வரையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 2015-ல் ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.
தேசியவாதம், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களை எதிர்த்து பாஜக இந்த தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டது. இதற்கு எந்த அளவுக்கு டெல்லி மக்கள் வரவேற்பு அளித்தனர் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.