This Article is From Apr 11, 2019

தேர்தல் விதிமீறல்: மதுரை அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் விதிகளை மீறியதாக மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல்: மதுரை அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து, தேர்தல் தேதி நெருங்கி வருவதால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுரை மக்களவைத் தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. நேற்று முன்தினம் வரை மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுவதாக கூறப்பட்ட வாக்குப்பதிவு, திடீரென மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.

இதில், மதுரையில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் காவல்துறையினர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அப்போது வாக்குப்பதிவு செய்யும் இடத்தில் மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்தியன், விதிகளை மீறி வாக்கு சேகரித்தபடி நின்றுகொண்டிருந்தார். இதுதொடர்பான செய்திகள் தொலைக்காட்சியில் வரவும், அதிமுக வேட்பாளர் ராஜ்சத்தியனை அப்பகுதியில் இருந்து தேர்தல் அதிகாரிகள் வெளியேற்றினர்.

இதைத்தொடர்ந்து, தபால் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தது தேர்தல் விதிமுறை மீறல் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், அமமுக வேட்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்கு சேகரித்ததாக அதிமுக வேட்பாளர் ராஜ்சத்தியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

.