This Article is From Apr 11, 2019

ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஒரே கட்டமாக நடக்கும் சட்டசபை தேர்தல்!

ஆந்திர பிரதேசம், சிக்கிம், ஒடிசா மற்றும் அருணாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 28 தொகுதிகளில் மட்டும் இன்று முதல்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஒரே கட்டமாக நடக்கும் சட்டசபை தேர்தல்!

91 மக்களவைத் தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

ஹைலைட்ஸ்

  • மக்களவைத் தேர்தலுடன் 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.
  • ஆந்திராவில், ஜெகன் ரெட்டியுடனான கடினமான மோதலை சந்திபாபு எதிர்கொள்கிறார்.
  • ஒடிசாவில் நவீன் பட்நாயக் முதலமைச்சராக போட்டியிடுகிறார்.
New Delhi:

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19–ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாநிலங்களிலும், 2 இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடந்து வருகிறது.

அந்த வகையில், ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆந்திரா பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களிலும் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆந்திரத்தில் தேர்தல் நடைபெறும் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல், மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,118 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் தனித்தனியாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிக்கப்பட்டன. அதையடுத்து நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும். தெலுங்கு தேசம் கட்சியின் 37 ஆண்டுகால வரலாற்றில், தேர்தலை அக்கட்சி தனித்து எதிர்கொள்வதும் இதுதான் முதல்முறையாகும்.

ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வழக்கமாக போட்டியிடும் சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஆந்திர தலைநகர் அமராவதியில் அமைந்துள்ள மங்கள கிரி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா மாவட்டம் புலிவெண்டுலாவில் போட்டியிடுகிறார். தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் சவாலாக திகழும் ஜனசேனா கட்சியின் தலைவரும் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் பீமாவரம் மற்றும் கஜவாக்கா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

ஆந்திரா முன்னாள் முதல்வர் என்டி ராமராவின் மகள் புரந்தேஸ்வரி விசாகப்பட்டினத்தில் பாரதியஜனதா சார்பில் போட்டியிடுகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகனின் ஒன்றுவிட்ட சகோதரர் அவினாஷ் ரெட்டி கடப்பா தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

.