This Article is From Mar 15, 2019

மதுரையில், தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற முடியுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரையில், தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற இயலுமா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையில், தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற முடியுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்றைய தினமே, மதுரையில் வருடந்தோறும் சித்தரா பௌர்ணமி தினத்தன்று உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் திருவிழா நடைபெறவுள்ளது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால், அன்றைய தினம் வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும். எனவே வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மதுரையில் மட்டும் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குத் தொடர்ந்தார். அதில், காவல்துறையினரும் அன்றைய தினம் போதுமான பாதுகாப்பை வழங்க இயலாது என்றும் தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தரம் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட தேர்தல் ஆணையர், மற்றும் காவல்துறையிடம் சரியான விளக்கம் பெற்றுள்ளோம். தேர்தல் அன்று பாதுகாப்பு வழங்க முடியும் காவல்துறை தெரிவித்திருப்பதாகச் சொன்னார்.

தேர்தலை பொறுத்தவரை வாக்காளர்களே முக்கியமானவர்கள். திருவிழா நேரத்தில் நகருக்குள் நுழைவதே சிரமமான ஒன்று. அப்படியிருக் கும்போது வாக்காளர்கள் எப்படி வாக்குசாவடிக்கு செல்வார்கள்? நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக இருக்கும்போது, இதில் ஏன் ஆர்வம் காட்டவில்லை?

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொள்ளாதது துரதிர்ஷ்டமானது. மதுரையை பொறுத்தவரை தேர்தல் தேதியை மாற்றி வைக்க முடியுமா? என்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வரும் 14 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.

.