கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த வாரம் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பிய நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோல், சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி கமல்ஹாசன் பேச்சுக்கு பதில் தெரிவித்தார். அதில், எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும் அப்படி இருந்தால் அவர் இந்து அல்ல என்றும் உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை என்று கூறினார். மேலும், எந்தவொரு பயங்கரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது என்றும் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு இடையே சென்னை விமான நிலையத்தில் இன்று காலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். நான் ஏற்கனவே சென்னை மெரினாவில் கூறிய கருத்தைத்தான் அரவக்குறிச்சியிலும் கூறினேன், மெரினாவில் பேசியதை பெரிதுப்படுத்தாதவர்கள் அறவக்குறிச்சியில் பேசியதை பெரிதுப்படுத்திவிட்டார்கள்.
நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. இந்துக்கள் யார்? ஆர்எஸ்எஸ் யார் என்று பிரித்து பார்க்க வேண்டும். நான் பேசியதால்தான் மகாத்மா காந்தி பற்றி மேலும் பல நல்ல நல்ல கருத்துகள் வெளிவருகின்றன. சமூக பதற்றம் உருவாகவில்லை, உருவாக்கப்பட்டிருக்கிறது. என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது. கைதுக்கு நான் பயப்படவில்லை, கைது செய்தால் இன்னும் தேவையில்லாத பதற்றம்தான் அதிகரிக்கும்.
பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல மாட்டேன், சரித்திரம் பதில் சொல்லும், எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் சரித்திரம் காட்டுகிறது. வாலையும், தலையையும் கத்தரித்து போட்டால் யாரும், யாரையும் குறைசொல்லலாம். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாக்கை அறுப்பேன் என்று பேசியது அவரது குணாதிசயத்தை காட்டுகிறது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு மட்டுமல்ல, எனது அரசியல் பணியிலும் கூறுக்கீடு இருக்கிறது. சூலூரில் நான் பரப்புரை மேற்கொள்ள தடை விதித்திருப்திலும் அரசியல் உள்ளது. அங்கு பதற்றமான சூழல் இருந்தால் ஏன் தேர்தலை தள்ளிவைக்கக்கூடாது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.