காயம் ஏதுமின்றி சின்னத்தம்பியை பிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஹைலைட்ஸ்
- மயக்க ஊசியை செலுத்தி சின்னத்தம்பியை பிடித்துள்ளனர்
- சுயம்பு, கலீல் ஆகிய கும்கிகள் சின்னத்தம்பியை பிடிக்க உதவின
- சின்னத்தம்பியின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் போக்குக் காட்டி வந்த யானை சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி, கும்கிகளின் உதவியோடு வனத்துறையினர் பத்திரமாக பிடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த யானை சின்னத்தம்பியை பிடிக்க நேற்று முதல் வனத்துறையினர் ஆயத்தமாகி இருந்தனர். சுமார் 70-க்கும் அதிகமான வனத்துறையினரும், மருத்துவக்குழுவினரும் யானையை பிடிக்க வியூகம் வகுத்தனர்.
நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், யானை வெளியே வராததால் அந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை சுமார் 8 மணியளவில் சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
இந்த ஊசி யானையின் கால் பகுதியில் பாய்ந்தது. பின்னர் வாழைத் தோட்டத்திற்குள் சின்னத்தம்பி சென்றது. பின்னர் கும்கி சுயம்பு, கலீல் ஆகியவற்றின் மூலம் தோட்டத்திலிருந்து யானை வெளியே கொண்டுவரப்பட்டு அதைத் தொடர்ந்து மயக்க ஊசிகள் துப்பாக்கி மூலம் செலுத்தப்பட்டன.
இதையடுத்து சின்னத்தம்பி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன் மீது கும்கிகளின் உதவியோடு கயிறுகளை கட்டி லாரியில் ஏற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க - "திணறும் வனத்துறை - கரும்பு தோட்டத்திற்குள் நுழைந்த சின்னத்தம்பி"