This Article is From Mar 30, 2020

மூன்று காரணங்களுக்கு மட்டுமே அவசர பாஸ்: காவல் ஆணையர் திட்டவட்டம்!

சென்னை நகரில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அவசரமாக செல்ல வேண்டிய தேவை இருந்தால் உரிய அடையாள அட்டையுடன் என்ற gpcorona2020@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். 

மூன்று காரணங்களுக்கு மட்டுமே அவசர பாஸ்: காவல் ஆணையர் திட்டவட்டம்!

மூன்று காரணங்களுக்கு மட்டுமே அவசர பாஸ்: காவல் ஆணையர் திட்டவட்டம்!

ஹைலைட்ஸ்

  • மூன்று காரணங்களுக்கு மட்டுமே அவசர பாஸ்
  • உறவினரின் திருமண நிகழ்வுகள், மரணம், அவசர மருத்துவ தேவை
  • மெதுவாக பரிசீலனை செய்து அவசர பாஸ் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்

நெருங்கிய உறவினரின் திருமண நிகழ்வுகள், மரணம், அவசர மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே வெளியூர் செல்ல அவசர பாஸ் வழங்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதையொட்டி பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு நாடுகளும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன. அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்தியாவும், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

எனினும், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், 27 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று வரை 50 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலால் திருமண நிகழ்வுகள், இறுதி சடங்கில் மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது, மக்களின் நன்மைக்காகத்தான் யாரும் வெளியே செல்லக் கூடாது என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அப்படி இருக்கையில், சென்னையில் இருந்து வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலங்கள் செல்ல இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை போன்ற 3 காரணங்களுக்காக மட்டுமே அவசரப் பாஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை நடத்தவும், திருமணத்தில் பங்கேற்கச் செல்லவும் அவசர பாஸ் வழங்கப்படும். அதேப்போல, மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்லவும் பொதுமக்களுக்கு அவசரப் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், வாட்ஸ்-அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக திருமணம், இறப்பு, மருத்துவச் சிகிச்சை மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களைக் கூறி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து சேருகின்றன. இவற்றில், அவசரப் பயணங்களுக்கு மட்டுமே உடனடியாக பரிசீலித்து அவசரப் பயணப் பாஸ் அளிக்கிறோம். 

இதில்லாமல் வேறு பல காரணங்களுக்காக வரும் விண்ணப்பங்களை மெதுவாக பரிசீலனை செய்து அவசர பாஸ் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றுஅவர் தெரிவித்துள்ளார். 

சென்னை நகரில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அவசரமாக செல்ல வேண்டிய தேவை இருந்தால் உரிய அடையாள அட்டையுடன் என்ற gpcorona2020@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். 

.