Read in English
This Article is From Aug 18, 2018

எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்: சுந்தர் பிச்சையிடம் கூகுள் ஊழியர்கள் கோரிக்கை

எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்: சுந்தர் பிச்சையிடம் கூகுள் ஊழியர்கள் கோரிக்கை

Advertisement
உலகம்

Highlights

  • தெளிவற்ற நிலையே நிலவுகிறது: சீனத்திட்டம் பற்றி சுந்தர் பிச்சை
  • சீனாவின் தணிக்கைக்கு கூகுள் ஒப்புக்கொள்வது குறித்து ஊழியர்கள் கவலையடைந்து
  • கூகுள் உயர் அதிகாரிகள் இது குறித்து எக்கருத்தும் தெரிவிக்கவில்லை
San Francisco:

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்த தகவலின்படி, சீனாவில் கூகுள் தனது தேடுபொறி செயலியை அறிமுகம் செய்வது இன்னும் இறுதியாகவில்லை. இத்திட்டம் குறித்து அரசல் புரசலாக வந்துகொண்டிருக்கும் செய்திகளால் இதுபற்றி வெளிப்படைத் தன்மை தேவை என்று கூகுள் பணியாளர்கள் கோரி வருகின்றனர்.

இதுகுறித்து கூறியுள்ள கூகுளின் தலைமைச் செயல் அலுவலர் சுந்தர் பிச்சை, “சீனாவில் கூகுள் தேடுபொறிச் சேவையை அறிமுகம் செய்யும் திட்டம் தொடக்கநிலையில்தான் உள்ளது. உலகின் மிக அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் நமது சேவை அறிமுகமாவது கூகுளின் உலக அளவிலான குறிக்கோளுடன் பொருந்துகிறது” என்று பணியாளர்களிடம் கூறியதாகத் தெரிகிறது.

சீனாவில் கூகுளை அறிமுகம் செய்ய அந்நாட்டிடம் ஒப்புதல் பெறுவதற்காக அவர்களது கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை ஏற்று சில தளங்களையும், தேடுசொற்களையும் கூகுள் தடைசெய்யலாம் என ராய்ட்டர்ஸ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில்தான் சுந்தர் பிச்சை, “கூகுளை சீனாவில் அறிமுகப்படுத்துவது குறித்த சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து வருகிறோம். ஆனால் உறுதியாக இப்போதைக்கு எதையும் கூற இயலாது” என்று அறிவித்ததாக செய்தி கிடைத்துள்ளது.

சீனாவில் கூகுள் சேவை தொடங்க பூர்வாங்க முயற்சிகள் இரகசியமாக நடைபெற்று வருவதாக வெளியான செய்தி கூகுளின் ஊழியர்களையும் மனித உரிமை ஆணையங்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதன்மூலம் சீனாவின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான கொள்கைக்கு கூகுள் அங்கீகாரம் அளித்ததாக ஆகிவிடும் என்றும் கூகுளின் நடத்தை விதியான “தீமையாக இராதே” என்பது மீறப்பட்டுவிடும் என்றும் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Advertisement

அதனால் இதுகுறித்து வெளிப்படைத்தன்மை தேவை என்று நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஒரு மனுவை உருவாக்கிக் கோரி வருவதற்கான ஆதாரம் ராய்ட்டர்சிடம் கிடைத்துள்ளது. இதேபோன்றதொரு மனுவின் பின்னர், அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானங்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் புகட்டும் திட்டத்தில் உதவுவதை கூகுள் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது டிராகன்ஃபிளை ( #Dragonfly ) என்ற பெயரால் குறிக்கப்பெற்று வரும் சீனத்திட்டத்திலும் கூகுளின் அறம்சார்ந்த நிலைப்பாடு கேள்விக்குள்ளாவதாக கூகுள் பணியாளர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

வெளிப்படைத்தன்மை கோரும் பணியாளர்களின் மனு பற்றி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டபோது கூகுள் அதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

டிராகன்ஃப்ளை குறித்து ஓர் உயர்நிலைச் சீராய்வுக் குழு அமைக்கப்பட்டு அதுகுறித்து எழுப்பப்படும் அறமீறல் சார்ந்த புகார்களை ஆராய வேண்டும் என பணியாளர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

“சில திட்டங்கள் அரும்பும் நிலையில் இருக்கும்போது அவற்றைப் பற்றிய தகவல்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இரகசியமாகக் காக்கப்படுகின்றன. திட்டம் தொடங்குவது பற்றி ஒரு தெளிவு கிடைத்தவுடன் வெளிப்படைத்தன்மையாக இருப்போம்” என்று தற்போது சுந்தர் பிச்சை பணியாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

சீனாவிலிருந்து முற்றிலும் விலகி இருப்பதை விட வரம்புக்குள் இயங்கி முடிவுகளைக் காட்டும் தேடுபொறியினை அறிமுகம் செய்ய கூகுளின் தற்போதைய தலைமை முயலலாம் என்று சீனா தொடர்பான திட்டங்களில் பணியாற்றிய சில முன்னாள் கூகுள் பணியாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement

ஆனால் இதே எண்ணத்துடன்தான் 2006 -இலும் சீனாவில் கூகுள் நுழைந்தது. ஆனால் கூகுள் மற்றும் இதர அமெரிக்கப் பெருநிறுவனங்களுக்கு எதிராக இணையத்தாக்குதல்களை அரசே ஊக்குவித்ததான பிரச்சினையில் 2010இல் வெளியேறியது.

சீனா மீண்டும் கூகுளை அனுமதிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே முன்னாள் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பெயர் வெளியிட விரும்பாத சீன அலுவலர் ஒருவர், இவ்வாண்டு இறுதிக்குள் டிராகன்ஃப்ளை அறிமுகமாவது கடினம் என்று தெரிவித்திருக்கிறார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement