ஹைலைட்ஸ்
- குழந்தைகள் மீதான வன்முறைகள் தற்போது கிராமங்களிலும் நடக்கத் தொடங்கிவிட்டது
- வன்கொடுமை வழக்குகளில் காவல்துறைதான் குற்றவாளிகளைத் தப்ப வைக்கின்றது
- தண்டனைகள் குறித்து கிராமங்கள் வரை விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்
பொது வெளியில் பெண்கள் பாதிப்புக்குள்ளாகும்போது அதையெதிர்த்து தீரமுடன் போராடும் உணர்வு என்பது, உலகின் மூத்த இனக்குழுவில் ஒன்றான தமிழ்ச் சமூகத்தின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். ஆனால், தற்போதைய சூழலில் பெண்கள் மீதும் பெண் குழந்தைகள் மீதும் தொடுக்கப்படும் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வந்துகொண்டிருக்கிறது. இப்படியான சமூக மாற்றத்தின் மீது ஆரோக்கியமான விவாதத்தை உருவாக்க என்டிடிவி தமிழ் தனது பங்களிப்பினை செலுத்த விரும்புகின்றது. அதன் அடிப்படையில் தொடர்ந்து பெண்ணியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளைத் தொகுத்து வழங்க முயன்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தோழர்.பாலபாரதி நம்மிடையே பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் உங்களுக்காக…
குழந்தைகள் மீதான வன்முறைகள் நகரங்களில் எங்கோ ஓரிரு இடங்களில் நடைபெறுகிறது என்பதைக் கடந்து, தற்போது கிராமங்களிலும் நடக்கத் தொடங்கிவிட்டது. இது உளவியல் சார்ந்த விசயமாக இருந்தாலும், இதைத் தடுப்பதற்கு அரசுதான் முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையில் இதை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெரும்பாலும், குழந்தைகளின் சந்தேக மரணங்களில் பாலியல் வன்கொடுமைகள் ஏதும் நடைபெறவே இல்லையென மழுப்பிவிடுகிறார்கள்.
புதியதாகத் திருமணமாகி ஐந்து வருடத்திற்குள் பெண் இறந்துபோனால் ஆர்டிஓ சம்பவ இடத்திற்கு வந்து மேற்பார்வை செய்தபின்னர்த்தான் காவல்துறை உடலைக் கைப்பற்றுவதோ அல்லது அடுத்தகட்ட நடவடிக்கைக்கோ செல்ல முடியும். ஆனால், குழந்தைகளின் சந்தேக மரணங்களில் காவல்துறையினர், குழந்தையின் உடலை எரித்துவிடுமாறு பெற்றோர்களைத் நிர்பந்திக்கின்றார்கள். இவ்வாறு உடலை எரித்துவிடுவதன் மூலம் தடங்களை முற்றிலுமாக அழிக்க முனைகிறார்கள். இதே போன்ற சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கிராமத்தில் அரங்கேறியுள்ளது. எனவே குழந்தைகள் சந்தேக மரணத்திலும் ஆர்டிஓ முதலில் குழந்தையின் சடலத்தைப் பார்வையிட வேண்டும். பின்னர் ஆர்டிஓ வழிகாட்டுதலின் பேரில் காவல்துறையினர் இயங்க வேண்டும்.
குழந்தைகள் பாலியில் வன்கொடுமை வழக்குகளில் காவல்துறைதான் குற்றவாளிகளைத் தப்ப வைக்கின்றது.சட்டங்களைப் பொறுத்த அளவில் தற்போது உள்ள சட்டங்களே போதுமானவைதான். ஆனாலும், விரைவான நீதியைக் கொடுக்கக்கூடிய வகையில் புதிய சட்டம் வேண்டுமெனில், சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
அதேபோல குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அரசின் தண்டனைகள் என்னென்ன என்பது குறித்து கிராமங்கள் வரை விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.இவற்றில் எல்லாவற்றிற்கும் மேலாகப் பெண்கள் ஒரு போகப் பொருளாக, நுகர்வு கலாச்சாரத்தின் பண்டமாக சமூகத்தில் அடையாளம் காணப்படுகிறாள். இந்த போக்கினை மாற்றுவதற்கு ஆண்பெண் சமத்தும் குறித்த கல்வியை பலப்படுத்த வேண்டும்.
மற்றொருபுறம், தமிழக அரசின் கீழ் பெண்கள் ஆணையம் இயங்கி வருகிறது. இதில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு மேற்குறிப்பிட்ட பரந்துப்பட்ட பார்வை என்பது இல்லாது இருக்கின்றது. ஆகவே இதிலும் மாற்றம் தேவைப்படுகிறது.
நாம் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கையில், இம்மாதிரியான பிரச்சினைகளுக்குத் தீர்வாக என்கவுண்டர் முன்வைக்கப்படுகிறது. என்கவுண்டர் மூலமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் குறைத்துவிட முடியாது.
எனவே இதற்குத் தீர்வாக, மாநில அளவில் பெண் அமைப்புகளைக் குழுவாக நியமித்து அவர்களின் கருத்துக்களைக் கொண்டு பெண்கள் ஆணையத்தினை முழுமையாகச் செயல்பட வைப்பது மற்றொரு முனையில் பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை காவல்துறையினர் நேர்மையாக விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தச் செய்வது, இவையெல்லாம்தான் இம்மாதிரியான குற்றச் சம்பவங்களின் வீரியத்தினை குறைக்க உதவும்.