Srinagar: ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காமில் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்று அதே பகுதியைச் சேர்ந்த சலிம் அகமது ஷா என்ற காவலர் ஒருவர், கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொல்லப்பட்ட காவலர் ஷா, கத்துவாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். விடுமுறைக்கு குல்காமில் உள்ள தனது வீட்டுக்கு வந்த போது கடத்திக் கொல்லப்பட்டார்.
ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ராணுவம் மற்றும் மாநில காவல் துறையினர் இணைந்து குத்வானி என்ற இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். தேடுதல் பணி நடந்து கொண்டிருக்கும் போது, தீடீரென தீவிரவாதிகள் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து குல்காம் மற்றும் அனந்த்நாகில் மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. தெற்கு காஷ்மீரில், காவல் துறையினரை குறிவைத்து இது போல பல சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.