பல இடங்களில் அமலாக்கத் துறை சிவக்குமாருக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவில் மத்திய நிதி அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் என்று குறிப்பிட்டிருந்தது.
New Delhi: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார், சமீபத்தில் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு சில நாட்களுக்கு முன்னர் பிணை கொடுக்கப்பட்டது. அதற்கு எதிராக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை, டி.கே.சிவக்குமார் சம்பந்தப்பட்ட வழக்கின் ஆவணங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறித்த சில பத்திகளை இணைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உஷ்ணமான நீதிமன்றம், அமலாக்கத் துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி சிவக்குமார், அமலாக்கத் துறையால் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 23 ஆம் தேதி அவருக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தால் பிணை கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது பிணைக்கு எதிரான மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிவக்குமார் தரப்பு வழக்கறிஞரான முகுல் ரோத்தகி, ப.சிதம்பரம் வழக்கில் தயார் செய்யப்பட்ட ஆவணங்களின் பத்திகள் சிவக்குமாரின் வழக்கின் ஆவணங்களோடு இணைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
டி.கே.சிவக்குமார், கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர்
பல இடங்களில் அமலாக்கத் துறை சிவக்குமாருக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவில் மத்திய நிதி அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் என்று குறிப்பிட்டிருந்தது. அமலாக்கத் துறை ப.சிதம்பரத்துக்கு எதிராகவும் ஒரு பணமோசடி வழக்கை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கின் ஆவணங்கள்தான் சிவக்குமார் வழக்கு ஆவணங்களோடு கலந்திருப்பதாக தெரிகிறது.
அமலாக்கத் துறையின் இந்த தவறால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம், “நாட்டின் குடிமகன் ஒருவரை இப்படி நடத்துவது சரியன்று,” என்று கண்டித்தது.