This Article is From Oct 25, 2018

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: குற்றப்பத்திரிகையில் சிதம்பரத்தின் பெயர் முதலிடம்

நிதியமைச்சராக இருந்தபோது மகன் கார்த்தி சிதம்பரத்திற்காக வெளிநாடு முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு சிதம்பரம் ஒப்புதல் அளித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது

தொடக்கம் முதலே ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தின் பெயர் அடிபட்டது.

New Delhi:

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரத்தின் பெயர் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முதல் இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அவருடன் மகன் கார்த்தி சிதம்பரம், கார்த்தியின் கணக்காளர் உள்பட மொத்தம் 9 பேரின் பெயர், அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. தான் நிதியமைச்சராக இருந்தபோது மகன் கார்த்தி சிதம்பரத்திற்காக வெளிநாடு முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு சிதம்பரம் ஒப்புதல் அளித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் ப.சிதம்பரம் கடந்த 2006-ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது, மலேசிய நிறுவனமான மேக்சிஸ் இந்திய நிறுவனமான ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி அளவுக்கு முதலீடு செய்தது.

முதலீட்டின் அளவு அதிகம் என்றால் அதற்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழுதான் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் ரூ. 3,500 கோடி பணப் பரிமாற்றத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறப்படவில்லை என்றும், இந்த பண பரிமாற்றத்திற்கு சிதம்பரம் முறைகேடாக அனுமதி அளித்ததாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனமும் பண பரிமாற்றம் செய்ய உதவியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

அதாவது கார்த்தி சிதம்பரத்தின் டெலிவென்ச்சர் நிறுவனத்திற்கு ஏர்செல் ரூ. 26 லட்சத்தை அளித்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. இதேபோன்று அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் ப.சிதம்பரத்தின் பெயர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது அமலாக்கத்துறை தாக்கல் செய்யும் 2-வது குற்றப்பத்திரிகை ஆகும்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 

.