This Article is From Jun 04, 2018

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: மனித உரிமை ஆணையத்தின் விசாரணை தொடங்கியது

வரும் ஜூன் மாதம் 22 ஆம் தேதிக்கு முன்னர் தூத்துக்குடியில் நடந்த சம்பவம் குறித்து பொது மக்கள் கருத்து கூறுமாறு தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: மனித உரிமை ஆணையத்தின் விசாரணை தொடங்கியது

துப்பாக்கிசூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்

ஹைலைட்ஸ்

  • முதல் நாள் துப்பாக்கிசூட்டில் 10 பேர் இறந்தனர்
  • இரண்டவது நாள் துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலியாயினர்
  • ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது
Tuticorin:

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடந்த துப்பாக்கிசூடு குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது மனித உரிமை ஆணையம்.

தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த போராட்டம், அதன் 100-வது நாளில் தீவிரமடைந்தது. 100-வது நாளன்று அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று கருதி தூத்துக்குடி ஆட்சியர், 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இருந்தும் மக்கள் அறவழியில் போராடுவோம் என்று கூறினர். 100-வது நாளன்று ஊர்வலமாகச் சென்று கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் போராடும் மக்களுக்கும் இடையில் மோதல் உண்டானது. மக்கள் கூட்டத்தைக் கலைக்க, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால், ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த நாளும் துப்பாக்கி சூடு நடத்தியது போலீஸ். இதனால், மொத்தம் 13 பேர் பலியாகினர். 

இந்த துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு, ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்ற விசாரணை ஆணையம், அங்கு நடந்த அசம்பாவிதம் குறித்து விசாரணையை தொடங்கியது. போராட்ட நாள் அன்று ஆலைக்கு விளைவிக்கப்பட்ட சேதாரங்கள் குறித்தும், பொது சொத்துகளுக்கு விளைவிக்கப்பட்ட சேதாரங்கள் குறித்தும் அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர். மேலும், போராட்ட நாளன்று காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் மக்களையும் நேரில் சென்று சந்தித்து கருத்து கேட்டனர் விசாரணை அதிகாரிகள். 

வரும் ஜூன் மாதம் 22 ஆம் தேதிக்கு முன்னர் தூத்துக்குடியில் நடந்த சம்பவம் குறித்து பொது மக்கள் கருத்து கூறுமாறு தெரிவித்துள்ளனர் அதிகாரிகள். 

மே மாதம் 29 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு தடை விதித்தது தமிழக அரசு. மேலும், ஆலையை நிரந்தரமாக மூடவும் ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆணையை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

.