லடாக் பகுதியில் பணிபுரியும் 34 வயதான இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
- இந்தியா மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை
- இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
New Delhi: இந்திய ராணுவத்தில் வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், போர்க்கள மன நிலைக்கு மாறும்படி துணை ராணுவத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுமார் 10 லட்சம் துணை ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லடாக் பகுதியில் பணிபுரியும் 34 வயதான இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த ராணுவ வீரர், இந்திய ராணுவத்தின், லடாக் ஸ்கவுட்ஸ் படையைச் சேர்ந்தவர். அவர் கடந்த மாதம் விடுமுறையிலிருந்துள்ளார். அப்போது, பிப்.27ம் தேதியன்று அவரது தந்தை இரான் சென்று திரும்பியுள்ளார்.
இதையடுத்து, தந்தையைப் பார்த்துவிட்டு மார்ச்.2ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இதனிடையே, பிப்.29ம் தேதியன்று, தந்தைக்கு கொரோனா அறிகுறி ஏற்படவே அவர் மருத்துவமனையில் சேர்ந்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.
அப்போது, அவரது ரத்தப் பரிசோதனையில், மார்ச் 6ம் தேதியன்று அவருக்கு கொரோனா உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் தனி வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த வீரர் மீண்டும் தனது பணியில் சேர்ந்திருந்தாலும், அவர் தனது சொந்த கிராமத்தில் தங்கி, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அவரது குடும்பத்திற்கு உதவினார் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதைத்தொடர்ந்து, அவரது 2 குழந்தைகளும், மனைவியும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், வெளிநாடுகளிலிருந்துதான் இந்த கொரோனா வைரஸ் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும்தான் தொடர்பு உள்ளது.
நாட்டில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாத வரையில் பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.