ஆகஸ்ட் மாதத்தின்போது ஜம்மு காஷ்மீருக்க்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.
New Delhi: மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கும் 2 நாட்கள் காஷ்மீர் சுற்றுலாவை ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதிநிதிகள் தவிர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் முன்னேற்பாடுடன் கூடிய சுற்றுலாவை விரும்பவில்லை என்றும், காஷ்மீர் பயணம் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. இதன் பின்னர் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் பிரதிநிதிகள் அக்டோபர் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். அப்போது, காஷ்மீரின் கள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டு மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
அக்டோபர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாவைப் போன்று தற்போதும் சுற்றுலா செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த சுற்றுலா நாளை தொடங்குகிறது. இதில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, சில வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சுற்றுலாவை தவிர்த்துள்ளனர். பயண ஏற்பாடு அட்டவணை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
திட்டமிடப்பட்ட முன்னேற்பாடுடன் கூடிய சுற்றுலாவை ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் விரும்பவில்லை என்றும், அவர்கள் காஷ்மீர் மக்களை சுதந்திரமான முறையில் தாங்கள் விரும்பிய வகையில் சந்திப்பதற்கு விருப்பம் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் நாளை தொடங்கும் 2 நாட்கள் சுற்றுலாவில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி முதல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து பேசுவதற்கு ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் ஆர்வமாக உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஷ்மீரில் கடந்த 6 மாத காலமாக அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் விவாதிக்கப்பட்டது.
இதன் காரணமாகத்தான் 2 நாட்கள் சுற்றுலாவை மத்திய அரசு ஏற்பாடு செய்ததாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இதையொட்டி கடும் கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டன.
கடந்த அக்டோபர் மாதம் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த எம்.பி.க்கள் 23 பேர் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுநாள் வரையில் எதிர்க்கட்சிகள் ஜம்மு காஷ்மீருக்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் காஷ்மீர் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசிஸ் பிரதிநிதிகள் காஷ்மீருக்கு புறப்பட்டனர். அவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
இதற்கு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் காஷ்மீருக்கு வந்தது, இருநாட்டு உறவை வலுப்படுத்தும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.