This Article is From Jul 15, 2019

பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை 8 வழிச்சாலை: எடப்பாடி அறிவிப்பு!

சென்னை அருகே பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாக அறிவிப்பு.

பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை 8 வழிச்சாலை: எடப்பாடி அறிவிப்பு!

பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை 8 வழிச்சாலை


சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

நெடுஞ்சாலைத்துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், சென்னை அருகே பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

மேலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பெருங்களத்துரில் பல்லடுக்கு பாலம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவைப்படும் இடங்களில் பல்லடுக்கு மேம்பாலம் கட்டப்படும். தற்போது, சென்னை பெருநகர பகுதிகளில் 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மத்திய கைலாஷ் உள்ளிட்ட 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னை பெருநகர பகுதிகளில் பாலங்கள் அமைக்க ரூ.1,122 கோடியில் நிலம் கையகப்படுத்தப்படும். 13 மேம்பாலங்கள், 2 ரயில்வே பாலங்கள், 2 நடை மேம்பாலங்கள், 1 ஆற்றுப் பாலம் அமைக்கப்படும். சேலையூர், கொரட்டூர், வடபழனி, மத்திய கைலாஷ், மடிப்பாக்கம் உள்ளிட்டவையும் அந்த 13 இடங்களில் அடங்கும். 

மெரினாவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப்பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். நடப்பாண்டில் ரூ.300 கோடி மதிப்பில் சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை டைடல் பார்க் சந்திப்பில் 2 வடிவ மேம்பாலங்கள் ரூ.110 கோடியில் கட்டப்படும். 

சென்னை பெருநகர பகுதியில் ரூ. 299 கோடி மதிப்பில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும். 9 மாவட்டங்களில் 32 இடங்களில் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலங்கள் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

17 மாவட்டங்களில் ரூ155.80 கோடியில் 42 ஆற்றுப்பாலங்கள் கட்டப்படும். 1,456 கி.மீ நீள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.