This Article is From Nov 22, 2018

புயல் பாதிப்பு பகுதிகளைப் பார்வையிடாமல் டெல்லி சென்ற எடப்பாடி: தினகரன் தாக்கு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்காமலேயே அவசரம் அவசரமாக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று நிவாரண நிதி கேட்டுள்ளார் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

புயல் பாதிப்பு பகுதிகளைப் பார்வையிடாமல் டெல்லி சென்ற எடப்பாடி: தினகரன் தாக்கு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்காமலேயே அவசரம் அவசரமாக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று நிவாரண நிதி கேட்டுள்ளார் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கஜா புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், நிவாரண பணிகளுக்கான நிதியை பெறவும், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல்வர் எடப்பாடி நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

கஜா புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளோம். இடைக்கால நிவாரணமாக ரூ.1500 கோடி உடனடியாக வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். நிரந்தர நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம் என்று கூறினார்.

இந்நிலையில், இதுகுறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்காமலேயே அவசரம் அவசரமாக டெல்லிக்குப்போன எடப்பாடி பழனிசாமி நிவாரண நிதியாக 15,000 கோடியும், இடைக்கால நிவாரணமாக 1,500 கோடியும் கேட்டிருக்கிறார். இது போதுமானதல்ல.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் சேத மதிப்பே 25,000 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். இதை மனதில் வைத்து இடைக்கால நிவாரணமாக 5,000 கோடியையாவது கேட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கஜா புயலின் பாதிப்பினால் மக்கள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதுவே ஒரத்தநாடு சோழகன்குடிகாடைச் சேர்ந்த சுந்தர்ராஜன் அவர்களின் மரணத்திற்கு காரணமாக தெரிகிறது.

மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் உடனடியாக கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து உரிய நிவாரணம் படிப்படியாக கிடைக்கும் என்ற வாக்குறுதியை கூறினால் மட்டுமே மக்களை மனஅழுத்தத்திலிருந்து வெளிக்கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

.