தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 7ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 7ஆம் தேதி வரை ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமையன்று மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், தமிழகத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 21 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வழக்கத்தை விட மிகுந்த சீற்றத்துடன் கடல் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில்,
தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமல், முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருப்பது, மக்களை காக்காமல் அவர்களை உதாசீனப்படுத்துவதற்கு சமம்!
இப்படி பொறுப்பற்று செயல்பட்டதால் தான், 2015 டிசம்பர் வெள்ளம் - வர்தா புயல் - ஓகி புயலில் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளானார்கள். அதனை சிஏஜி அறிக்கையே தெளிவுபடுத்தியுள்ளது. இவர்களை இனியும் நம்பாமல், கழகத் தோழர்கள் அனைவரும் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு தயாராக வேண்டும் என அவர் கூறியுள்ளார்.