கலைஞர் மரணத்தில் கூட சித்திரவதை செய்த கூட்டம் எடப்பாடி கூட்டம்
கலைஞர் மரணத்தில் கூட சித்திரவதை செய்த கூட்டம் எடப்பாடி கூட்டம் என பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்கலங்கினார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
கடந்த முறை மோடி மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வானத்தை கிழிப்பேன் வைகுண்டத்தை காட்டுவேன் மணலை கயிறாக திரிப்பேன் என்ற அளவுக்கு வாக்குறுதிகளை வழங்கினார். கன்னியாகுமரியை உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாற்றுவேன் என்றார், மாறியதா? வாயில் வடை சுடுவதில் மோடி கில்லாடி. அந்த மாதிரி அறிவிப்புகளையும் உறுதிமொழிகளையும் வாரி வழங்கினார்.
மோடியின் சிஷ்யனாக, வாயில் வடை சுடும் மோடியின் வேட்பாளராக கன்னியாகுமரியில் வசந்தகுமாரை எதிர்த்து நிற்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். இவர் கடந்த தேர்தலிலும் எண்ணற்ற வாக்குறுதிகளை வாரி வழங்கினார். என்ன சொன்னார், என்ன செய்தார் என்று பட்டியல் எடுத்தேன் 63 உறுதிமொழி கொடுத்துள்ளார். அவர் வாயில் வடை சுட்டார். இவர் அடையே சுட்டுள்ளார். அது வடை, இது அடை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் மரணத்தில் கூட சித்திரவதை செய்த கூட்டம் எடப்பாடி கூட்டம். அண்ணாவுக்கு பக்கத்தில் 6 அடி இடம் தர மறுத்தது எடப்பாடி அரசு. எம்ஜிஆருக்கு அண்ணாவுக்கு பக்கத்தில் இடம் கொடுத்து, நினைவு மண்டபம் அமைத்தவர் கலைஞர். காமராஜருக்கு இடம் கொடுத்து நினைவிடம் உருவாக காரணமாக இருந்தவர். அந்த கலைஞருக்கு 6 அடி நிலம் இல்லை என்று எடப்பாடி கூட்டம் கூறியது.
நீங்கள் ஆறு அடிக்கு கூட தகுதியில்லாத குள்ள நரி கூட்டம். நான் வெட்கத்தை விட்டு சொல்கிறேன் என்று மேடையில் கண்கலங்கினார். நான், எனது அண்ணன் அழகிரி, மைத்துனர் செல்வம், நமது பொருளாளர் துரைமுருகன், டிஆர் பாலு, இப்படி ஒட்டுமொத்தமாக புறப்பட்டோம். சிலர் தடுத்தார்கள், முதல்வரை நேரடியாக கேட்போம். எடப்பாடி அல்ல, முதல்வர் என்பதால் கேட்போம்.
நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை. மரியாதை பார்க்கவில்லை, கலைஞர் புகழ், ஆசையை நிறைவேற்ற புறப்பட்டோம். வீட்டிற்கு சென்றோம். பலமுறை வாதிட்டோம். கையை பிடித்து கெஞ்சினேன். அனுமதி கிடைத்ததா? கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றோம். கலைஞருக்கு இடம் கொடுக்காதவர்களுக்கு இந்த தேர்தலில் வென்று பாடம் புகட்டுவோம் என்று அவர் கூறினார்.