"எடப்பாடி பழனிசாமிதான் தொண்டர்களின் முதல்வர்"
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகியும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையாவுக்கும், அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரனுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக உரசல் போக்கு நிலவி வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இசக்கி சுப்பையா, அதிமுக-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று தென்காசியில் செய்தியாளர்கள் சந்தித்து அது குறித்து பேசினார்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இசக்கி சுப்பையா, “டிடிவி தினகரன், என்னைத் தரக்குறைவாக பேசியுள்ளார். என்னை கேலி செய்யும் வகையில் பேசுகிறார். இனி என்னால் அமமுக-வில் தொடர முடியாது. அவர் பதற்றத்தில் இருக்கிறார்.
இதைத் தொடர்ந்துதான் அதிமுக-வில் இணைய முடிவெடுத்தேன். நான் மீண்டும் அதிமுக என்னும் தாய் கழகத்தில் இணைவது குறித்து தெரிவித்தவுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எனக்கு ஆதரவு தெரிவித்தார். அவர்தான் தொண்டர்களின் முதல்வர். ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் அவர்களும் என்னை அரவணைத்து ஏற்றுக் கொள்கிறார். வரும் 6 ஆம் தேதி அதிமுக-வில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் மீண்டும் இணைகிறேன். அதற்கான நிகழ்ச்சி தென்காசியிலேயே நடக்கும்.” என்று கூறினார்.