ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியாவுக்கான அதிகாரியாக இருந்தவர் ஷிகா கார்க்.
ஹைலைட்ஸ்
- 157 பேருடன் சென்ற எத்தியோப்பியா விமானம் நேற்று விபத்துக்குள்ளானது
- 35 நாடுகளை சேர்ந்தவர்கள் விமானத்தில் இருந்தனர்
- ஷிகா கார்கின் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை: சுஷ்மா
New Delhi: 157 பேரை பலிவாங்கிய எத்தியோப்பியா விமான விபத்தில் ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரி ஷிகா கார்க் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
எத்தியோப்பியா விமான விபத்தில் ஷிகா கார்க் உயிரிழந்துள்ளார். அவரது கணவரை போனில் தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. ஷிகாவின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள எனக்கு உதவுங்கள்.
இவ்வாறு சுஷ்மா கூறியுள்ளார். ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரியாக ஷிகா கார்க் செயல்பட்டு வந்தார். நைரோபியில் நடக்கும் ஐ.நா. சுற்றுச் சூழல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
ஷிகாவை தவிர்த்து வைத்யா பன்னாகேஷ், வைத்யா ஹன்சின், நுகவரபு மனிஷா ஆகிய இந்தியர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தனும் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் தலைநகர் நைரோபியை நோக்கி நேற்று காலை போயிங் 737 ரக விமானம் கிளம்பியது. அதில் பயணிகள் 149 பேர் மற்றும் விமான பணியாளர்கள் 8 பேர் என மொத்தம் 157 பேர் இருந்தனர்.
இந்த நிலையில் புறப்பட்டுச் சென்ற 6 நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான அந்த விமானம் அடிஸ் அபாபாவில் இருந்து தென்கிழக்கில் 60 கிலோ மீட்டர் தொலைவில் நொறுங்கிக் கிடந்தது. இதில் 35 நாடுகளை சேர்ந்த 157 பேரும் உயிரிழந்தனர்.