This Article is From Jul 01, 2020

போலியான பைலட் லைசென்ஸ் காரணமாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் சேவையை ரத்து செய்தது ஐரோப்பிய யூனியன்!!

பாகிஸ்தானின் 860 செயலில் உள்ள விமானிகளில் 262 பேர் போலி உரிமங்களை வைத்திருப்பதாக அல்லது பரீட்சைகளில் ஏமாற்றியதாக அரசாங்க மறுஆய்வு கண்டறிந்துள்ளதாக விமான அமைச்சர் கடந்த வாரம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, EASA இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

போலியான பைலட் லைசென்ஸ் காரணமாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் சேவையை ரத்து செய்தது ஐரோப்பிய யூனியன்!!

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போலி உரிமங்களை வைத்திருப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

Karachi:

சர்வதேச அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமான போக்குவரத்துகள் குறிப்பிட்ட அளவிலேயே இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் தேசிய விமான போக்குவரத்திற்கு (PIA) ஐரோப்பிய யூனியன் ஏவியேஷன் பாதுகாப்பு நிறுவனம் (EASA), ஆறு மாதங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் பயணிப்பதற்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. போலி அல்லது சந்தேகத்திற்குரிய உரிமங்களை வைத்திருப்பது என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தடையை பிறப்பித்துள்ளது.

மீதமுள்ள அனைத்து விமானிகளும் சரியான தகுதி பெற்றிருக்கிறார்களா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை, என ஐரோப்பிய யூனியன் ஏவியேஷன் பாதுகாப்பு நிறுவனம் பிஐஏவிடம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிஐஏ ஐரோப்பிய நாடுகளிடையே நம்பிக்கையை இழந்துவிட்டதாக பிஐஏ செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கான் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் 860 செயலில் உள்ள விமானிகளில் 262 பேர் போலி உரிமங்களை வைத்திருப்பதாக அல்லது பரீட்சைகளில் ஏமாற்றியதாக அரசாங்க மறுஆய்வு கண்டறிந்துள்ளதாக விமான அமைச்சர் கடந்த வாரம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, EASA இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

860 பாகிஸ்தானிய விமானிகளில் பாதிக்கும் மேற்பட்டோர்கள் பாகிஸ்தான் தேசிய விமான போக்குவரத்தில் விமானியாக இருக்கின்றனர். இந்நிலையில் இதில் 141 பேரை பாகிஸ்தான் அரசு உடனடியாக நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் பிஐஏ மற்றும் பிற அரசு நிறுவனங்களை சீர்திருத்துவதாக தெரிவித்தார். "நான் எனது தேசத்திடம் சொல்ல விரும்புகிறேன்: நமக்கு வேறு வழியில்லை, சீர்திருத்தங்கள் தவிர்க்க முடியாதவை" என நேற்று அவர் கூறியிருந்தார்.

பிஐஏவை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என்று விமான அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானில் கராச்சிக்கு அருகே சமீபத்தில் நடைபெற்ற விமான விபத்தில் 98 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு பைலட்டுகள்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.