This Article is From Apr 18, 2020

'கொரோனா விவகாரத்தில் முதல்வரும் அரசியல் செய்கிறார்' - மார்க்சிஸ்ட் கம்யூ. கடும் தாக்கு

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானத்தில் தமிழக அரசை விமர்சித்தும், சில இடங்களில் அரசுக்கு ஆலோசனை தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

'கொரோனா விவகாரத்தில் முதல்வரும் அரசியல் செய்கிறார்' - மார்க்சிஸ்ட் கம்யூ. கடும் தாக்கு

திமுக தலைவரின் விமர்சனத்திற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டோம் என்று தமிழக முதல்வர் இன்று கூறியிருந்தார்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பு குறித்து திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
  • தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது
  • முதல்வரின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பதில் அளித்துள்ளது

'எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக முதல்வரும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவரே தவிர, அதிகாரி அல்ல. அவரும் அரசியல்தான் செய்கிறார் என்பதை மறந்துவிட்டு புரியாதோர்போல் பேசுவது நகைப்புக்குரியது' என்று தமிழக முதல்வரின் விமர்சனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானத்தில் தமிழக அரசை விமர்சித்தும், சில இடங்களில் அரசுக்கு ஆலோசனை தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இதுகுறித்து, சேலத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், எதிர்க்கட்சிகள் ஒன்றும் மருத்துவர்கள் அல்ல. அவர்களிடம் ஆலோசனை கேட்க முடியாது. திமுக தலைவரின் விமர்சனத்திற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என்று காட்டமாக பேசினார். இந்த நிலையில், முதல்வரின் பேட்டிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா தடுப்புப் பணிகளில் அரசியல் செய்வதாக மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சிகள் மீது அபாண்டமாக பழிசுமத்திப் பேசி வருகிறார். உலக அளவில் இதுவரை சுமார் 1.5 லட்சம் பேரை பலி கொண்டிருக்கிற, கொடிய கொள்ளை நோயாக கரோனா நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற - வரலாறு காணாத ஒரு சூழலில் நாம் இருக்கிறோம்.

இப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலையில், அனைத்துக் கட்சிகளையும், சமூக நலனில் அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொண்டு கரோனா தடுப்புப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தி ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் உள்ளது.

இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்; எனவே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று கூறி வருகிறோம். ஆனால் முதல்வர் அதை ஏற்க மறுத்துவிட்டார். வறட்டுப் பிடிவாதத்தோடு அதை நிராகரித்து வருகிறார்.

பல மாநிலங்களில் அரசுகள், எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் கூட எதிர்க்கட்சிகளுடன். அனைத்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளார். ஆனால் தமிழகத்தில் மட்டும் எதிர்க்கட்சிகளுடன் பேச மாட்டோம், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட மாட்டோம் என்பதன் நோக்கம் என்னவோ?

இந்நிலையில், அரசுதான் கூட்ட மறுக்கிறது, எனவே எதிர்க்கட்சிகள் தரப்பில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்துவது, அதன் அடிப்படையில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு உதவிகளைச் செய்வது, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது என்ற முறையில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

ஆனால், தமிழக அரசின் சார்பிலும், வேறு பல அமைப்புகளின் சார்பிலும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மட்டும் நடத்தக் கூடாது என்று காவல்துறையை ஏவி தடுத்து நிறுத்தியது அராஜகத்தின் உச்சமே ஆகும்.

இந்தக் கூட்டம் கரோனா தடுப்பு விதிகளின்படி உரிய சமூக இடைவெளி மற்றும் முகக் கவச ஏற்பாடுகளுடன்தான் நடைபெற இருந்தது. அதையும் ஏற்றுக் கொள்ள அரசு தயாராக இல்லை. ஆனாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் என்ற முறையில் மக்களின் பிரச்சினைகளை, கோரிக்கைகைளை ஆய்வு செய்து அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய, தீர்வு காண செய்ய வேண்டிய பொறுப்பு என்பது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது.

அதன்படிதான் காணொலி மூலமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக அரசுக்கு கவனப்படுத்தும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், அதையும் பொறுப்பற்ற செயல் என்று முதல்வர் விமர்சித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சிகளை எல்லாம் கூட்டி ஆலோசனை கேட்பதற்கு அவர்கள் என்ன மருத்துவர்களா என்றெல்லாம் முதல்வர் அரசியல் வெறுப்புணர்வை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது இத்தகைய பேச்சு மிகவும் மலிவான அரசியல் என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

உண்மையில் தமிழகத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது முதல்வரா அல்லது எதிர்க்கட்சிகளா? இந்தப் பிரச்சினையில் எந்த இடத்திலும் பிற கட்சிகள் பணிகளில் இடம் பெற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அரசியல் செய்வது நீங்கள்தானே?

இன்னும் சொல்லப்போனால் கரோனா தடுப்புப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை மொத்தத்திலேயே ரூ.810 கோடிதான் அளித்திருக்கிறது. அதையும் கூட, பேரிடர் நிவாரண நிதி என்ற பெயரில்தான் அளித்திருக்கிறார்களே தவிர, தற்போது பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் கரோனா தடுப்பிற்காக பிரதமர் வசூலிக்கும் நிதியிலிருந்து எதுவும் தரவில்லை.

இதை தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும், எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஒருமித்த குரலை எழுப்பி மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும். அந்தப் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. அவரும் அதை கேட்கத் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் கேட்டாலும் அதை விமர்சிக்கிறார்.

அதேபோல எல்லாக் காலங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது, நிவாரணம் வழங்குவது என்பது அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும், தனிநபர்களும் செய்யக் கூடிய வழக்கமான ஒன்றே ஆகும். அதற்கும் கூட மனிதாபிமானமற்ற முறையில் ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்து, பின்னர் விளக்கம் கூறி, பின்னர் அதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அந்த உத்தரவை ரத்து செய்யும் அளவிற்கு நிகழ்வுகள் நடந்துள்ளன.

நிவாரணம் அளிப்பவர்கள் அரசிடம் அனுமதியெல்லாம் பெற வேண்டியதில்லை; தகவல் சொன்னால் போதும் என்று நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. இவையெல்லாம் என்ன நோக்கத்திற்காக தமிழக அரசு மேற்கொண்டது? உணவு, குடிநீர் வழங்குவதில் கூட எதிர்க்கட்சிகளின் பங்கு இருந்ததாக பதிவாகக் கூடாது என்ற எதேச்சதிகாரமான எண்ணம்தானே?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக முதல்வரும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவரே தவிர, அதிகாரி அல்ல. அவரும் அரசியல்தான் செய்கிறார் என்பதை மறந்துவிட்டு புரியாதோர்போல் பேசுவது நகைப்புக்குரியது.

எனவே, இதுபோன்ற அராஜகமான எதிர்நிலை மனோபாவத்தைக் கைவிட்டு, கரோனா பாதிப்பு என்பது ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை; அதன் பரவலைத் தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாக்கவும், ஊரடங்கால் வேலைவாய்ப்பு, வருவாய் உள்பட அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆக்கப்பூர்வமான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

.