This Article is From Apr 28, 2020

“மன்னிப்புக் கோரியிருந்தாலும்…”- துல்கருக்கு எதிராக திருமா போர்க்கொடி!

"நடிகர் துல்கர் சல்மான் அக்காட்சிக்காக மன்னிப்புக் கோரியிருக்கிறார் என்றாலும், அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்"

“மன்னிப்புக் கோரியிருந்தாலும்…”- துல்கருக்கு எதிராக திருமா போர்க்கொடி!

"படக்குழுவினரின் இழிபோக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்"

ஹைலைட்ஸ்

  • படத்தில் பிரபாகரன் பற்றி சர்ச்சை காட்சி உள்ளதென குற்றச்சாட்டு
  • துல்கர் சல்மான் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்
  • இந்த விவகாரத்தில் துல்கர் மன்னிப்புக் கோரியுள்ளார்

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான ‘வரனே அவசியமுண்டே'-வில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இழிவு செய்யும் விதமாக காட்சி இருப்பதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து துல்கர், ‘தமிழர்களை காயப்படுத்தோம் நோக்கில் காட்சி வைக்கப்படவில்லை. யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். 

“வரனே அவஷ்யமுண்டே என்னும் மலையாள திரைப்படத்தில் மேதகு பிரபாகரன் அவர்களை அவமதிக்கும் வகையில் ஒருகாட்சி இடம்பெற்றுள்ளது. இது தமிழ் உணர்வாளர்களை வெகுவாகக் காயப்படுத்தியுள்ளது. இப்படக்குழுவினரின் இழிபோக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடிகர் துல்கர் சல்மான் அக்காட்சிக்காக மன்னிப்புக் கோரியிருக்கிறார் என்றாலும், அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னதாக நாம் தழிமர் கட்சியின் சீமான், “தமிழக இளம் தலைமுறையிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே தற்போது துல்கர் சல்மான் அவர்கள் பொதுவெளியில் மன்னிப்புக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை தங்களுடைய படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பு என்பது தொடர்ந்துகொண்டே இருக்குமென்று எச்சரிக்கிறேன். எனவே காயம்பட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து உணர்வையும், அவர்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டின் தீவிரத்தையும் உணர்ந்து படத்திலிருந்து அக்காட்சியை முழுமையாக நீக்கவேண்டும்.

மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு மலிவான காட்சிகள் மூலம் தமிழர்கள், தமிழ்த் தலைவர்களை இழிவுபடுத்திவிடலாம் என்ற சிந்தனையே எழாமல் இருப்பதுதான் இரு சகோதர தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் நலம் பயக்கும் என்பதைத் தொடர்புடைய படக்குழுவினர் உணர்ந்து செயல்படுவர் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். 


 

.