கேரளாவில் இருக்கும் மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழக்கு தொடர்பாக பஞ்சாபைச் சேர்ந்த 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கோட்டயத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு மலங்கரா ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்த 4 பாதிரியார்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஜூன் மாதம் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் குறித்த தகவல்களை பொது வெளியில் விட்டுவிடுவதாக தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டினர் என்று கூறப்படுகிறது. இது குறித்த ஆடியோ பதிவு வெளியானதைத் தொடர்ந்து, இந்த வழக்கு குறித்தான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து, மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சர்ச், குற்றம் சுமத்தப்பட்ட அனைத்துப் பாதிரியார்களையும் அவர்கள் வகித்து வந்த பதவியிலிருந்து நீக்கியது. 4 பாதிரியார்களில் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி போலீஸில் சரண்டைந்தார்.
அதேநேரத்தில், பாதிரியார்களான கே.ஜார்ஜ் மற்றும் வர்கீஸ் கடந்த 6 ஆம் தேதி, முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களின் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவர்களை வரும் 13 ஆம் தேதிக்கு முன்னர் போலீஸில் சரணடையும்படியும் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில ஜலந்தரில் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணை குறித்து கோட்டயம் டி.எஸ்.பி கே.சுபாஷ், ‘இன்னும் நிறைய பேர் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்படுவர். தேவைப்பட்டால் ஜலந்தருக்கு சென்றும் விசாரணை நடத்தப்படும்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.