This Article is From Jan 04, 2019

‘யாராக இருந்தாலும் உண்மையைச் சொல்லணும்!’- ஜெ., மரணம் தொடர்பாக கொதித்த ஜெயக்குமார்

‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக யாராக இருந்தாலும் உண்மையைச் சொல்ல வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

Advertisement
Tamil Nadu Posted by

‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக யாராக இருந்தாலும் உண்மையைச் சொல்ல வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நிலை நலிவடைந்த காரணத்தால் கடந்த 2016, செப்டம்பரில் சென்னை, கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 மாத சிகிச்சைக்குப் பிறகும், அவர் உடல்நிலை தேறவில்லை. டிசம்பர் 5 ஆம் தேதி அவர் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அதிமுக-வில் இருந்தவர்களே, ‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது.

இதன் நீட்சியாகத்தான் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, பலரிடமும் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ராதாகிருஷ்ணன் மற்றும் ராம்மோகன ராவ் ஆகியோர், உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை ஜெயலலிதா மரணத்தில் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று கொதித்தார். அவருக்கு அமைச்சர் ஜெயக்குமாரும் ஆதரவு தெரிவித்தார்.

Advertisement

ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கருத்து கூறியதால், ஐஏஎஸ் சங்கம், ஜெயக்குமாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பேசியுள்ள ஜெயக்குமார், ‘யார் மீதும் தனிப்பட்ட முறையில் குறை கூற வேண்டும் என்பதற்காக அப்படி நான் பேசவில்லை. இறந்தது, ஒரு பெரும் தலைவர். அவர் மரணம் குறித்து அனைவரும் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதால் தான் அப்படி சொன்னேன்' என்று விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement