சுயநலம் என்பது மிகவும் மோசமானது என ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
New Delhi: பாஜக - சிவசேனா கூட்டணி முறிவு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இரண்டு கட்சிகளையும் பெயரையையும் கருத்து தெரிவித்துள்ளார்.
சுயநலம் என்பது மிகவும் மோசமானது. ஆனால், ஒரு சிலர் மட்டுமே சுயநலத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். அதற்கு நாட்டையோ அல்லது தனிநபர்களையோ எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராத காரணத்தினால், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது.
இதில், தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியான பாஜகவை முதலில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். எனினும், அழைப்பை ஏற்க பாஜக மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, முதல்வர் பதவியையும் தேவேந்திர ஃபட்நாவிஸ் ராஜினாமா செய்தார்.
பாஜகவும் - சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், அதிகாரப்பகிர்வு மோதல் காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷா சிவசேனாவுடம் கொண்ட ஒப்பந்தத்தின் படி, 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்ட அம்சங்களை சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தியது.
எனினும், பாஜக இதனை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வந்தது. மேலும், அதிக இடங்களை கைப்பற்றிய தங்கள் கட்சி எதற்காக சரிபாதியாக அதிகாரத்தை பகிர வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி மறுப்பு தெரிவித்து வந்தது.
இதைத்தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது. இதற்காக தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதையடுத்து, சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது.
With inputs from ANI