हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 16, 2019

“மிருகங்களைப் போல அடைக்கப்பட்டுள்ளோம்!”- அமித்ஷாவுக்கு காஷ்மீர் மாஜி முதல்வரின் மகள் கடிதம்

"உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகள், அடக்குமுறைகளைப் பற்றி பேசக் கூடாதா?"

Advertisement
இந்தியா Edited by
Srinagar:

ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வரான மெஹ்பூபா முப்டியின் மகள் இல்திஜா ஜாவத், தனது நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அங்கு நிலவும் நிலை குறித்து விவரிக்கும் வகையிலும் இரண்டாவது முறையாக ஆடியோ வெளியிட்டுள்ளார் இல்திஜா ஜாவத்.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஜம்மூ காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370 ரத்து செய்யப்படுவது குறித்தும் ஜம்மூ காஷ்மீர், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்பது குறித்தும் மத்திய அரசு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 12வது நாளாக ஜம்மூ காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தொடரும் நிலையில், அங்கிருக்கும் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வீட்டுச் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்டி ஆகியோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஜாவத், “நாட்டின் மற்ற பகுதிகள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன. ஆனால் காஷ்மீரிகள் மிருகங்களைப் போல அடைக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் அவர்களுக்குப் பறிக்கப்பட்டுள்ளது. நான் ஊடகங்களிடம் பேசியதால்தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறேன். மீண்டும் நான் ஊடகங்களிடம் பேசினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளேன். 

Advertisement

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகள், அடக்குமுறைகளைப் பற்றி பேசக் கூடாதா. கசக்கும் உண்மையைச் சொல்வதற்கு நான் ஒரு போர் குற்றவாளி போல நடத்தப்பட்டு வருகிறேன்.” என்று அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தனது நிலை குறித்து விவரிக்கும் வகையில், ஒரு ஆடியோவையும் வெளியிட்டுள்ளார் ஜாவத். முன்னதாக ஒரு ஆடியோ வெளியிட்ட ஜாவத், தனது தாய் கைது செய்யப்பட்டு யாரும் பார்க்க முடியாத நிலையில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தார். ஜம்மூ காஷ்மீரில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

Advertisement

இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் ஜம்மூ காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு இத்தகவலைத் தெரிவித்துள்ளது. 

Advertisement