"எந்த அதிகாரிகளும் எதையும் தவறாக செய்யவில்லை. யாரும் கைது செய்யப்படக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்”
ஹைலைட்ஸ்
- எனது சார்பில் குடும்பத்தினரிடம் பதியுமாறு கேட்டுக்கொண்டேன்- சிதம்பரம்
- பல ட்வீட்களை சிதம்பரம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது
- தற்போது திகார் சிறையில் இருக்கிறார் ப.சிதம்பரம்
New Delhi: ஊழல் புகார் காரணமாக டெல்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவை இட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சம்பந்தமுடைய அதிகாரிகள் பற்றி ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார் சிதம்பரம்.
இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில், “எனது சார்பில் கீழ்வரும் ட்வீட்டை எனது குடும்பத்தினரிடம் பதியுமாறு கேட்டுக் கொண்டேன்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற அதிகாரிகள் கைது செய்யப்படாத போது நீங்கள் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பது ஏன் என்று என்னிடம் மக்கள் கேட்கிறார்கள். ஒரு விஷயத்தில் கடைசியாக கையெழுத்திட்ட காரணத்திற்காக மட்டும்தான் உங்களை கைது செய்திருக்கிறார்களா?
எந்த அதிகாரிகளும் எதையும் தவறாக செய்யவில்லை. யாரும் கைது செய்யப்படக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம், 14 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றம், இரண்டு வாரங்கள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துதான் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.