'தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள்’- P Chidambaram
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடீயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, டெல்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் (P Chidambaram), இன்று மீண்டும் தனது ட்விட்டர் பக்கம் மூலம் கருத்திட்டுள்ளார்.
அவர் தனது குடும்பம் மூலம், ‘தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள்' என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த ‘ஹவுடி மோடி' நிகழ்ச்சி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் இந்தியாவின் அனைத்து மொழிகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் இப்படி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சில நாட்களுக்கு முன்னர், “இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியை தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் அதை கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
உள்துறை அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தன. அதைத் தொடர்ந்து அமித்ஷா, “தாய்மொழிக்குப் பின்னர் இந்தி கற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது” என்று விளக்கம் அளித்தார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ப் புலவர் கணியன் பூங்கன்றனாரின், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்“ என்ற வரிகளை மேற்கோள் காட்டினார்.