சிறையில் இருந்தாலும், தனது ட்விட்டர் பக்கத்தை குடும்பத்தின் உதவியுடன் மிகவும் உயிர்ப்போடு வைத்துள்ளார் சிதம்பரம்.
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், “செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் திகார் சிறையில் இருக்கிறேன். இங்கு எனக்கு தலையணையோ அல்லது இருக்கையோ கொடுக்கப்படவில்லை. இதனால் முதுகு வலி வந்துவிட்டது” என்று முறையிட்டுள்ளார். சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர், அவருக்கு மருத்துவச் சோதனை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அனைத்தையும் கேட்டுக் கொண்ட நீதிமன்றம், சிதம்பரத்தின் காவலை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
“முன்னர் எனது அறைக்கு வெளியே இருக்கைகள் இருந்தன. அதில் நான் அமர்ந்திருப்பேன். தற்போது, அதுவும் நீக்கப்பட்டுவிட்டன. நான் பயன்படுத்திய காரணத்திற்காகவே அந்த இருக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. தற்போது சிறை வார்டன் கூட இருக்கை இல்லாமல்தான் உள்ளார்” என்று வழக்கு விசாரணையின்போது தெரிவித்தார் ப.சிதம்பரம்.
இதற்கு அரசுத் தரப்பு, “இது ஒரு சிறிய விஷயம். அறைக்குள் எந்த இருக்கையும் இருக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்” என்று எதிர் வாதம் வைத்தது. அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்.
அக்டோபர் 3 வரை சிதம்பரத்துக்குக் காவல் நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்தையும் விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீட்டித்தது. இதற்கு சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், “கஸ்டடி என்பதை வெறுமனே அதிகரிக்க முடியாது. கஸ்டடியை அதிகரிக்கக் காரணம் என்ன?” என்று கேட்டார்.
சிதம்பரம் சார்பில் வாதாடிய இன்னொரு வழக்கறிஞர், அபிஷேக் மனு சிங்வி, “சிதம்பரம், 14 நாட்கள் போலீஸ் ரிமாண்டு மற்றும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலை முடித்துவிட்டார். இதன் பிறகும் காவல் நீட்டிப்பு கொடுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை, சிறையில் இருந்தபடியே ப.சிதம்பரம், தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சிறையில் இருந்தாலும், தனது ட்விட்டர் பக்கத்தை குடும்பத்தின் உதவியுடன் மிகவும் உயிர்ப்போடு வைத்துள்ளார் சிதம்பரம். அவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கறாரான விமர்சனங்களையும் வைத்து வருகிறார்.