This Article is From Aug 25, 2020

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!

இன்று டெல்லியில் 1 மணி அளவில் ஜேபி நட்டா தலைமையில் அக்கட்சியில் அண்ணாமலை, இணைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை.

ஹைலைட்ஸ்

  • 2019 ஆம் ஆண்டு வரை ஐபிஎஸ்-ஆக பணிபுரிந்தவர் அண்ணாமலை
  • எந்த கட்சியில் சேரப்போவது குறித்தும் அண்ணாமலை தெளிவான பதில் கொடுக்கவில்லை
  • பிரதமர் மோடியை பாராட்டியிருந்தார் அண்ணாமலை

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, இன்று பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது. 

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த அண்ணாமலை, 2013 ஆம் ஆண்டு, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஏஎஸ்பி-யாக தன் பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மே மாதம் வரை, கர்நாடகாவில் அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 

பின்னர் அரசியலில் ஆர்வம் கொண்டதால் ஐபிஎஸ் பணியை துறந்தார். குறிப்பாக தமிழக அரசியலில் ஈடுபட உள்ளது குறித்து அண்ணாமலை, பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், எந்தக் கட்சியோடு இணைய உள்ளார் என்பது குறித்து அவர் ஸ்திரமான பதிலைத் தரவில்லை. 

அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியை அவர் வெளிப்படையாக பாராட்டியிருந்தார். சாதாரண பின்புலத்திலிருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்ததற்காக பிரதமர் மோடியை அவர் பாராட்டியிருந்தார். அதேபோல பாஜகவுக்கு ‘நல்ல கட்சி' என்று சான்றளித்திருந்தார். மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை வரவேற்றுப் பேசியிருந்தார். 

இப்படியான சூழலில்தான் இன்று டெல்லியில் 1 மணி அளவில் ஜேபி நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் உடனிருப்பார் எனப்படுகிறது. 

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சியில் அண்ணாமலை, ‘முதல்வர் வேட்பாளராக' இருப்பார் என்று கூறப்பட்டது. அண்ணாமலை, ரஜினியின் கட்சி குறித்தான அறிவிப்புக்காக காத்திருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ரஜினி, இதுவரை கட்சி ஆரம்பிப்பது பற்றி எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. 


 

.