சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கப்படும் சிசிடிவி வீடியோ காட்சிகள்
Bhopal, Madhya Pradesh: மத்திய பிரதேச மாநிலம் குணஷவ்பூரி சாலையில் இருக்கும் சுங்கச்சாவடியில் இரு ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த முன்னாள் பாஜக தலைவர் நந்தகுமார் சிங் செளகானிடம், வழக்கம் போல் சுங்க கட்டணம் கேட்டுள்ளனர். அப்போது தான் முன்னாள் பாஜக தலைவர் என அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரிடம், பணியில் இருந்த ஊழியர்கள் அடையாள அட்டையை காட்டும் படி கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த நந்தகுமார் சிங் செளகானின் ஆதரவாளர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும், நந்தகுமார் சிங் செளகான் இந்த சம்பவத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மத்திய பிரதேசத்திற்கு பாஜக தலைவர் அமித்ஷா வர இருப்பதால், அதற்கான பணிகளை பார்வையிட்டு வரும்போது தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதில் இந்தூர், ராட்லாம் மற்றும் உஜ்ஜயில் உள்ளிட்ட பகுதிகளில் அமித்ஷா தேர்தல் பிரச்சார பரப்புரை மேற்கொள்கிறார்.