மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராகவும் நாராயண் ரானே இருந்துள்ளார்.
Mumbai: முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவின் மகனும், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நிதிஷ் ரானே பாஜகவில் இணைந்துள்ளார். இது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் வரும் 21-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரான ஆதித்யா தாக்கரே, கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது. இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த அவருக்கு, கட்சியின் சார்பாக பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
மும்பையில் ஆயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் பேரணியாக திரண்டு வந்து ஆதித்யா தாக்கரேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவின் மகனும், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவுமான நிதிதேஷ் ரானே பாஜகவில் சேர்ந்துள்ளார்.
அவர் காங்கிரசில் இருந்தபோது 2014-ல் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கன்காவ்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2017-ல் நாராயண் ரானே ஸ்வபிமான் கட்சியைத் தொடங்கினார்.
பின்னர் அவரை பாஜக மாநிலங்களவை எம்.பி.யாக்கியதால், அவர் கட்சியை பாஜகவுடன் இணைத்தார். அதற்கு முன்பாக சிவசேனாவில் இருந்த அவர், 2005-ல் காங்கிரசுக்கு தாவினார். தற்போது அவரது மகன் நிதிஷ் ரானே காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவியுள்ளார்.