பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இம்மாதம் 15-ம் தேதியிலிருந்து நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி தற்போது அறிவித்துள்ளார்.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுபட்ட வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், புதிய பாடத்திட்டம் அதே போல தொழிற்கல்வி பழைய பாடத்திட்டம் போன்றவற்றிற்கான தேர்வுகள் ஜூன் 15 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தேர்வினை தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. மேலும், நோய்த்தொற்று வல்லுநர்கள் குறுகிய காலத்தில் நோய்த் தொற்று குறைய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய் தொற்று வல்லுநர்களின் கருத்துகளையும் கேட்டு, மாணவர்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க அனைத்து தேர்வுகளும் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மதிப்பெண்களை பொறுத்த அளவில், மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொண்டு 80 சதகிவிக மதிப்பென் மற்றும் வருகை பதிவு பொறுத்து 20 சதவிகித மதிப்பெண்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடுபட்ட தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.