This Article is From May 20, 2019

பாஜக-வுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகள்… ‘இது எதுக்குனா’- விளக்கும் மம்தா!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் இருக்கும் 543 இடங்களில் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது

பாஜக-வுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகள்… ‘இது எதுக்குனா’- விளக்கும் மம்தா!

மம்தா பானர்ஜியின் சொந்த மாநிலத்தில் பாஜக, மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 12-ல் வெல்லும் எனக் கூறப்படுகிறது.

New Delhi:

2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து, வாக்குப்பதிவுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள், பாஜக-வுக்கு ஆதரவாக வந்துள்ளன. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள், பல எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம். ஆனால் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, கருத்துக் கணிப்புகளை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. 

“தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப் புரளிகளை நான் நம்பத் தயாராக இல்லை. இந்த வதந்தி மூலம், பல்லாயிரக்கணக்கான ஈ.வி.எம் இயந்திரங்களை மாற்ற முயற்சி நடக்கும். நான் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும், ஸ்திரமாக, நம்பிக்கையுடன் தைரியமாக இருங்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்பிகிறேன். நாம் அனைவரும் இந்தப் போராட்டத்தை சேர்ந்து முன்னெடுப்போம்” என்று கருத்து தெரிவித்துள்ளார் மம்தா. 

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் இருக்கும் 543 இடங்களில் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 120 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனப்படுகிறது. 

மம்தா பானர்ஜியின் சொந்த மாநிலத்தில் பாஜக, மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 12-ல் வெல்லும் எனக் கூறப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக, மேற்கு வங்கத்தில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல கடந்த ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த போதும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக, கம்-பேக் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

மம்தா பானர்ஜி, பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் பல எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து, பாஜக இல்லாத ஆட்சியை அமைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

மம்தா பானர்ஜி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து சந்தேகம் தெரிவிப்பதில் நியாயம் உள்ளது. 2004 ஆம் ஆண்டு தேர்தலின் போதும், பல கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி 250 இடங்களைக் கைப்பற்றும் என்றும், சிலர் பாஜக, தனிப் பெரும்பான்மை பெறும் என்றும் கணித்தனர். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 335 இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்தது. 

மம்தாவைப் போலவே, பிகாரின் ராஷ்டிரியா ஜனதா தளமும், “கருத்துக் கணிப்புகள் என்பது, செய்தி சேனல்கள், தங்களது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வெளியிடும் ஒன்று. வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த கட்சிக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படவில்லை என்றால், டிவி-யை அவர்கள் அணைத்துவிடுவர். இதனால் டி.ஆர்.பி ரேட்டிங் குறையும்” என்று கூறியுள்ளது. 

(ஏஜென்சி தகவல்களுடன் எழுதப்பட்ட செய்தி)

.