Lok Sabha elections 2019: தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன. தேர்தல் முடிவுகள் மே.23ல் அறிவிக்கப்படுகின்றன.
New Delhi: 2014 தேர்தலை போலவே பாஜக பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 543 தொகுதிகளில் 303 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 126 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்புகளின் படி, கடந்தமுறை பாஜக தோல்வியுற்ற மேற்குவங்கம், ஓடிசா தொகுதிகளில் இந்தமுறை வெற்றி பெற உள்ளது. ஒடிசாவில் பாஜகவுக்கும் பிஜூ ஜனதா தளத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் கடந்த 2014 தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, இந்த தேர்தலில் 14 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க முதல்வரின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 42 தொகுதியில் 24 தொகுதியில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 மாநிலங்களில் வளர்ச்சி பெறும் பாஜக உத்தர பிரதேசத்தில் சில இடங்களில் தோல்விபெறும் என தெரிகிறது. கடந்த 2014 தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கடந்தமுறையை காட்டிலும் இந்தமுறை குறைவான எண்ணிக்கையை பெரும் என தெரிகிறது.
இதேபோல், கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் பெரிய வெற்றிகளை பெறாது என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்.11ஆம் தேதி தொடங்கிய தேர்தலில், 7கட்டமாக 543 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள், வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 288 தொகுதிளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.
ஆனால், இந்த கணிப்புகளை விட பெரும் அளவில் எண்ணிக்கைகள் மாறியது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 336 தொகுதிகளிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 59 தொகுதிகளிலுமே வெற்றி பெற்றது.
பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்றது. இங்கும் எளிதாக அவர் வெற்றி பெறுவார் என்று தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி 142 தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். சில நாட்களில் ஒரு நாளில் 5 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.