தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக ஊழல் புகார் சுமத்தப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் ஏன் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, மூன்று மாதங்களுக்கு முன்னர் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககத்திடம் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது ஊழல் புகார் கொடுத்தார். அதில், ‘தன் பதவியை பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சம்பாரித்து, அதை பல நிறுவனங்களில் ஓ.பி.எஸ் முதலீடு செய்துள்ளார். இவை அனைத்தையும் அவர் பினாமி மூலம் நிர்வகித்து வருகிறார். மேலும், தனது வருமான வரி கணக்குகள் குறித்து தவறான தகவல்களை தேர்தல் ஆணையம் முன்பு அவர் சமர்பித்துள்ளார்’ என்று பல ஆவணங்களை சமர்பித்தார்.
மூன்று மாதங்கள் கழித்தும் புகாருக்கு எந்த வித நடவடிக்கையும் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககம் எடுக்கவில்லை என்பதால், உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக முறையிட்டார் ஆர்.எஸ்.பாரதி.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ‘புகார் கொடுத்து 3 மாதங்களுக்குப் பின்னரும் ஏன் ஓ.பன்னீர்செல்வம் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது’ என்று ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்ககத்திடம் கேள்வியெழுப்பி வழக்கை வரும் திங்கள் கிழமை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)