குண்டு வெடித்ததை அடுத்து, சம்பவ இடத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Jammu: ஜம்மூவில் உள்ள பேருந்து நிலையத்தில், பேருந்து ஒன்றுக்கு அடியில் கையெறி குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 26 பேருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் நடந்த சரியாக 3 வாரம் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது, ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள போலீஸ் அதிகாரி ஒருவர், ‘பேருந்துக்கு அடியில் குண்டு இருந்துள்ளது. நகரத்தின் மையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும்தான். பேருந்துக்கு உள்ளே குண்டு வெடிப்பின் போது யாராவது இருந்தார்களா என்று தெரியவில்லை' என்றுள்ளார்.
இன்னொரு மூத்த போலீஸ் அதிகாரி மணீஷ் குமார் சின்ஹா, ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம், ‘இன்று காலை சுமார் 11:30 மணி அளவில் ஒரு குண்டு பேருந்து அடியில் உருண்டு சென்று வெடித்துள்ளது' என்று கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடக்கும் மூன்றாவது கையெறி குண்டு தாக்குதல் இதுவாகும்.
குண்டு வெடித்த பேருந்தில் மக்கள் இருந்தார்களா என்பது குறித்து சரியான தகவல் இல்லை. ஆனால் குண்டு வெடித்ததை அடுத்து, சம்பவ இடத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
உள்ளூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடித்ததால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம், ‘முதலில் நான் ஒரு டயர் வெடித்த சத்தம் என்றுதான் நினைத்தேன். ஆனால், அது ஒரு பெரிய வெடி விபத்து என்று பின்னர்தான் தெரிந்தது. சம்பவம் நடந்ததை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்' என்று பதற்றத்துடன் கூறியுள்ளார்.