"32 ஃபேஸ்புக் பக்கங்கள் & கணக்குகள் ஒரே மாதிரியான பாணியில் ஒன்றிணைந்து விஷமத்தனமான தவறான தகவல்களை சமூகப்பிரிவினையை ஏற்படுத்தும் நோக்குடன் பரப்பி வரும் செயல்களில் ஈடுபட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளோம். இதுஅமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைப்பருவத் தேர்தல்களைக் குறிவைத்து நடத்தப்பட்டு வந்துள்ளன" என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
எனினும் 2016 அதிபர் தேர்தலின்போது அறியப்பட்டதைப் போல தற்போது கண்டுபிடிக்கப்பட்ட செயல்பாட்டின் பின்னணியில் ரஷ்யாவின் கை இருப்பதை உறுதிப்படுத்த இயலவில்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் செயல்படும் பாணியில் இது 2016இல் இணைய ஆய்வு முகமை என்னும் ரஷ்ய நிறுவனத்தை ஒத்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அமெரிக்க காங்கிரசில் விளக்கமளித்த ஃபேஸ்புக் தரப்பு, "தற்போது கண்டுபிடிக்கப்பட்ட செயல்பாடு அரசியல்வாதிகளைக் குறிவைப்பதாக இல்லை. இது சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் தவறான தகவல்களை சமூக நிகழ்வுகளின் அடிப்படையில் பரப்பி வருகிறது" என்றுள்ளது.
முன்பு இணைய ஆய்வு முகமையினால் (IRA) நடத்தப்பட்ட பரப்புரையை விடவும் மேம்பட்ட முறையில் இந்தப் புதிய செயல்பாடுகள் அமைந்துள்ளன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இப்பக்கங்கள், அடுத்த வாரம் தீவிர வலதுசாரியினர் வாசிங்டனில் நடத்த இருக்கும் பேரணி ஒன்றுக்கு எதிரான நிகழ்வை விளம்பரப்படுத்தி வந்ததையும் ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது. இப்பக்கங்களை 18,000 பேர் பின்தொடர்கிறார்கள். இவை அரசியல்வாதிகள், வேட்பாளர்களைக் குறிவைப்பதாக உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் இவற்றுள் ஒரு கணக்கு IRAவுடன் தொடர்புடைய ஒரு கணக்கை சிறிது நேரத்துக்குப் பின்தொடர்ந்திருப்பதையும் ஃபேஸ்புக் கண்டுபிடித்துள்ளது. இதுபோன்ற செயல்களைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மேலும் கடுமையாக்க அமெரிக்க அரசுத் தரப்பு ஃபேஸ்புக்கிடம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக 2016அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ரஷ்யாவின் கைங்கர்யத்தால் நூற்றுக்கணக்கான கணக்குகளில் இருந்து பரப்பப்பட்ட தவறான தகவல்கள் நூறு மில்லியன் அமெரிக்கர்களைச் சென்று சேர்ந்து பெரும் பரபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)