கே.சி பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக பெயரில் போலியாக இணையதள பக்கம் தொடங்கியதாக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவையை சார்ந்தவர் கே.சி பழனிசாமி. இவர், கடந்த 2018ம் ஆண்டு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அதிமுக அறிவித்தது.
சமீப காலமாக இவர் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை தொலைக்காட்சி விவாதங்களில் வெளிப்படையாக பேசிவந்தார். எனினும், வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல் தொடர்ந்து அதிமுகவின் தலைவர்களை சந்தித்து பேசி வந்து தன்னை அதிமுகவுடனான ஒரு அங்கமாகவே காட்டி வந்தார்.
இந்நிலையில், கே.சி பழனிசாமி இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் தான் கட்சியில் நீடிப்பதாக கூறியதோடு பலரையும் ஏமாற்றி வந்ததாகவும், அதிமுக போலி இணையதளம் நடத்தி மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் அவரது வீட்டில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரை கைது செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமி மேல் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.