சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினர் தலா ரூ.91.5 லட்சம் பெற்றுள்ளனர் என நித்தியானந்த் ராய் கூறியுள்ளார்.
New Delhi: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் இதர சலுகைகளாக கிட்டத்தட்ட ரூ.1 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், சிஆர்பிஎஃப் இடர் நிதி, சிஆர்பிஎஃப் மத்திய நல நிதி, எஸ்பிஐ வங்கியின் சம்பள தொகுப்பு உள்ளிட்ட நிதிகளின் மூலம் கிட்டதட்ட தலா ரூ.1 கோடி வரை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர வீரர்களின் குடும்பத்தினருக்கு அவரவர் சொந்த மாநிலத்தில் இருந்தும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த பிப்.14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானைப்படை வீரர்கள் குண்டுகள் வீசி பயங்கரவாத பயிற்சி முகாமை தரைமட்டமாக்கினர்.
இதைத்தொடர்ந்து மறுநாளே, இந்திய எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய போர் விமானங்கள் குறுக்கிட்டு அவற்றை தடுத்து நிறுத்தின. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை, இந்திய விமானப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இந்தநிலையில், தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய விமானப்படை வீரர் சென்ற மிக்-21 ரக போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து அபினந்தன் உயிர் தப்பினார்.
எனினும், பாகிஸ்தான் எல்லையில் அபினந்தன் தரையிரங்கியதால் அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து, 2 நாள் சிறை பிடித்து வைத்திருந்தது. பின்னர், சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார்.