ஃபனி புயலால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, வட தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்
வங்கக் கடலில் அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ள ‘ஃபனி'-யின் தற்போதைய நிலை குறித்தும், தமிழகத்தில் அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார்.
செய்தியாளர்கள் மத்தியில் இயக்குநர் பாலச்சந்திரன், ‘ஃபனி புயலானது இன்று அதிகாலை அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. அது சென்னையில் இருந்து சுமார் 577 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது. நாளை மாலை வரை ஃபனி புயல் வடமேற்கு திசையில் நகரும். அதன் பின்னர் வடக்கு மற்றும் வட கிழக்கு திசை நோக்கி அது நகர்ந்து செல்லும். மே 3 ஆம் தேதி ஃபனி புயல் ஒடிசாவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
ஃபனி புயலால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, வட தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றானது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், சில சமயம் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஃபனி புயலால், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.