This Article is From May 05, 2019

ஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி அறிவிப்பு!

Fani cyclone news: ஃபனி புயல் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல்(Cyclone Fani), நேற்று முன்தினம் காலை ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 185 முதல் 200 கிமீ வரை பலத்த சூரைக்காற்று வீசியது. இதில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, மேற்கூரைகள் பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

இப்படி, புயலால்(Fani) தாக்கப்பட்ட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் மட்டுமின்றி மருத்துவமனை, ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் உள்ளிட்ட இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த புயலின் கோரதாண்டவத்தால் ஒடிசாவே உருமாறிக்கிடக்கிறது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப்பணியில் துரிதம் காட்டி வருகின்றன. ஒடிசா அரசு, புயலை சரியாக கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் உயிர்ச் சேதத்தை பெருமளவு குறைத்துள்ளது.

ஃபனி புயலை(Cyclone Fani news) சரியாக கையாண்டு உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுத்துள்ளதாக இந்தியாவை ஐநாவை சேர்ந்த பேரிடர் மீட்புக் குழு பாராட்டியுள்ளது.

ஃபானி புயலால் ஏற்பட்ட விபத்துகளில் 12 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புயலால் பாதித்த ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும் ஒடிசாவில் புயல் மற்றும் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, ஒடிஷா அரசுக்கு எந்தவித உதவியும் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

.