இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது கிழக்கு இந்திய பெருங்கடல் - தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது.
தொடர்ந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும். அந்த புயலுக்கு ஏற்கனவே கூறியபடி ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஏப்.27ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தை ஏப்ரல் 30ம் தேதி ஃபானி புயல் தாக்கும் என்பதால் பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல் படையினர் தயார் நிலையில் இருக்கவும் காவல்துறை டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனிடையே சென்னைக்கு தென்கிழக்கே 1490 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்றும் அடுத்த 36 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)