ஃபனி புயலானது, வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்பகுதி நோக்கி செல்லும் நிலையில், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஃபனி புயலானது, மிக அதி தீவிரப்புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோர காவல்படை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, ஃபனி புயலானது இன்று அதிகாலை அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. அது சென்னையில் இருந்து சுமார் 577 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது.
நாளை மாலை வரை ஃபனி புயல் வடமேற்கு திசையில் நகரும். அதன் பின்னர் வடக்கு மற்றும் வட கிழக்கு திசை நோக்கி அது நகர்ந்து செல்லும். மே 3 ஆம் தேதி ஃபனி புயல் ஒடிசாவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
ஃபனி புயலால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, வட தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றானது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், சில சமயம் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஃபனி புயலால், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஃபனி புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு ரூ.1,086 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு ரூ.309 கோடி ரூபாயும், ஆந்திரா 200.25 கோடி ரூபாயும், ஒடிசா 340.87 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 235.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.