ஐப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் டிரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி
New Delhi: ஜப்பானில் நடக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் ஒசாகா சென்றுள்ளார். 20 நாட்டின் தலைவர்களும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது. அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரதமர் மோடியிடம் பேசிய டிரம்ப், நீங்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்.
நீங்கள் முதலில் பொறுப்பேற்றபோது, இந்தியாவில் பல பிரிவுகள் இருந்தன, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள், இப்போது அனைவரும் சேர்ந்து இருக்கிறார்கள். நீங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதில் ஒரு பெரும் வேலை செய்துள்ளீர்கள். இதற்கு உங்கள் அற்புதமான திறன்கள்களே காரணம்.
இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமடைந்துள்ளது என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். நாங்கள் பல துறைகள் ஒன்றாகச் செயல்படுகிறோம். தற்போது வர்த்தகம் தொடர்பாகவும் பேசுகிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவுடன் நேர்மறையான உறவைப் பேணுவதற்கு இந்தியா செயல்படும். இந்தியா அமெரிக்காவுடன் வலுவான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து மேம்பட்ட இராணுவ வன்பொருள்களை வாங்கியுள்ளது.
அமெரிக்காவுடன் ஒரு நேர்மறையான உறவுக்காக தொடர்ந்து நாங்கள் பணியாற்ற முயற்சிப்போம்... இந்தியா-அமெரிக்காவின் பார்வை தொலைநோக்கு மற்றும் நேர்மறையானது. இரு நாடுகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேயுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் போது, சர்வதேச பொருளாதார சூழல், இந்தியாவில் ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புப் பணிகள், தலைமறைவு நிதி மோசடியாளர்கள் விவகாரம், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் சூழல்களை கையாளுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.