ஸ்ரீகாகுளம் மாவட்டம் பெய்ட்டி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
Srikakulam: பெய்ட்டி புயல் பாதிப்பால் பயிர்கள் அழிந்ததைக் கண்ட விவசாயி ஒருவர் அதிர்ச்சியில் வயலிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்திருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த திங்களன்று பெய்ட்டி புயல் கரையைக் கடந்தது. இதனால் கடலோ ர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
இதனால் கொட்டிப்பள்ளி பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன், பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம் அடைந்தன. இதனைப் பார்த்த விவசாயி சின்னராவ், அதிர்ச்சியால் தனது நிலத்திலேயே உயிரிழந்தார்.
சொந்த வயலில் அவரது சடலம் கிடக்கும் காட்சி இணைய தளங்களில் வைரலாக பரவியது. உயிரிழந்த சின்னராவுக்கு 3 மகன்களும், மகளும் உள்ளனர்.
இதுகுறித்து அவரது மகன் காமேஸ்வர் கூறுகையில், '' ஏற்கனவே வந்த புயலில் எங்களது தந்தை கடுமையாக பாதிக்கப்பட்டார். இப்போது மீண்டும் புயல் வீசி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் உயிரிழந்தார்'' என்று தெரிவித்தார்.
பெய்ட்டி புயல் பாதிப்பால் 2 நாட்களாக ஆந்திராவில் கன மழை பெய்தது. இதில் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.