மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நூதன முறையில் தன் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். வெங்காய விவசாயியான சஞ்சய் சாத்தே, தன் விளைச்சலை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய்க்கு விற்க நேர்ந்ததால், தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக தன் வருமானத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார்.
நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய், 2010 ஆம் ஆண்டு அமெரிக்கா பிரதமர் ஒபாமா இந்தியா வந்த போது அவருடன் உரையாட, மத்திய விவசாய அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளில் ஒருவர்.
இந்தியாவின் மொத்த வெங்காய உற்பத்தில் 50 சதவீதம் மகராஷ்டிரா வடக்கில் இருந்து தான் வருகிறது.
‘இந்த சீசனில் மொத்தம் 750 கிலோ வெங்காயம் விளைவித்தேன். ஆனால் கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என சந்தையில் விலை பேசினார்கள். பின்னர், பேரம் பேசி கிலோ ஒன்றுக்கு 1.40 ரூபாய் என முடித்தனர். மொத்தம் 750 கிலோவை 1,064 ரூபாய்க்கே விற்க நேர்ந்தது.
நான்கு மாத உழைப்பிற்கு வெறும் 1,064 ரூபாய் தான் சன்மானம். மனம் உடைந்து போய் நான் சம்பாதித்த 1,064 ருபாயை தேசிய பேரழிவு நிவாரண நிதிக்கு அனுப்பிவிட்டேன். அதனை அனுப்புவதற்கு மணி ஆடர்க்கு 54 ரூபாய் என் கையில் இருந்து போட்டேன். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. ஆனால் நடப்பு அரசு எங்கள் விவசாயிகளின் இன்னல்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பது மன வருத்தம் அளிக்கிறது' என்று நொந்து கொண்டார் அந்த ஏழை விவசாயி.
ஒபாமா உடனான சந்திப்பு குறித்து சஞ்சய்யிடம் கேட்டபோது, ‘விவசாயிகளுக்காக அரசு கொடுக்கும் தொழில்நுட்ப சேவையை நான் தொடர்ந்து உபயோகித்து வந்தேன். அதன் மூலமாக எனக்கு கால மாற்றங்கள் குறித்து அறிய முடிந்தது. இதன் பொருட்டு, நான் விளைச்சலை அதிகரித்தேன்.
விவசாயத்தில் என் அனுபவத்தை குறித்து ரேடியோக்களில் பேசி உள்ளேன். அதனால் ஒபாமா, மும்பை புனித சேவியர் கல்லூரிக்கு வந்த போது அங்கு ஸ்டால் அமைக்க விவசாய அமைச்சகம் அழைத்தது. நானும் அங்கு சென்று ஸ்டால் அமைத்தேன். அப்போது, மொழிப்பெயர்ப்பாளர் மூலமாக ஒபாமாவிடம் சிறிது நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது' என்றார் சஞ்சய்.